Saturday, March 31, 2007

காரைக்குடியின் சிறப்பு – அந்த ஊர் மக்கள்

1991 முதல் 1992 வரை ஏறத்தாழ ஒரு வருடம் காரைக்குடியில் குடும்பத்துடன் வசித்தேன். என் மகள் 3-வது வகுப்பிலும், மகன் யூ.கே.ஜி.யிலும் படித்துக் கொண்டிருந்த்தனர். நான் இருந்த வாடகை வீட்டின் சொந்தக் காரர் என் இனிய நண்பர், அமரர் திரு. விஆர். அருணாசலம் அவர்கள்.

கடுமையான சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டு காலில ஆறாத காயத்துடன் (தினசரி புதுப்பிக்கப்பட்ட பாண்டேஜுடன்) நான் பணியாற்றிய வங்கி அலுவலகத்தில் பணி புரிந்த திரு அருணாசலம். சிறந்த மனித நேயம் கொண்டவர். வெகு சீக்கிரமே எங்களுக்கு என்று தனியான பிரச்சினைகள் என்று ஒன்று இல்லாத நிலை உருவானது. எங்கள் எந்தத் தேவைகளையும் தானே அறிந்து கொண்டு மனமுவந்து உதவும் மனப்பான்மை கொண்ட அந்தக் குடும்பத்தை நாங்கள் என்றும் மறக்க முடியாது. எங்கள் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் ஆட்டோ வரத் தாமதமானால், திரு அருணாசலத்தின் மகனோ அல்ல்து திரு அருணாசலமோ தாங்களே சென்று அழைத்து வந்து விடுவது, அங்கு வசிக்கும் போது வாயிலும் குடலிலும் புண ஏற்பட்டு நான் அவதிப்பட்ட போது தங்கள் வீட்டில் அதைக் குணப்படுத்த கஞ்சி தயாரித்து அளித்தது என்று நான் பெற்ற உதவிகள் ப்ற்பல.

காரைக்குடி நகரத்தார்கள் மற்ற்வர்களின் தேவை அறிந்து அவர்கள் கேட்காமல் கூட உதவி செய்யும் தங்கள் மனப்பான்மை பற்றி நியாயமான பெருமை அடைபவர்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்:

அங்கிருந்து மாறுதல் பெற்று நான் பீஹார் மாநிலம் ராஞ்சி என்ற நகரத்துக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்த வீட்டைப் பூட்டி சாவியை திரு அருணாசலம் வீட்டில் கொடுத்ததுச் சென்றேன். ஒரு மாதம் கழித்து குடும்பத்தையும் சாமான்களையும் புதிய ஊருக்கு மாற்ற அங்கிருந்து காரைக்குடியை நோக்கி சென்னையிலிருந்து ரயிலேறும் சமயம், காரைக்குடியை நோக்கிக் குடும்பத்துடன் பயணம் செய்யும் ஒருவர் என்னிடம் வந்து அவருக்குத் தெரிந்த ஒருவராக என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு என்னிடம் பேசத்தொடங்கினார். பின்னர் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவரவர் பெட்டிகளை நோக்கிப் பிரிந்தோம். காரைக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த போது அந்த நண்பர் தனது ஸ்கூட்டரை என் பக்கம் கொண்டு வந்து நிறுத்தி அதில் ஏறிக்கொள்ளுமாறு கூறினார்.

நான் ராஞ்சி சென்று திரும்புவதற்குள், திரு அருணாசலம் அவர்கள் தங்கள் வீட்டை வேறொருவருக்கு விற்று விட்டுத் தன் குடும்பத்துடன் புதிய வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட்டார்.

அவருடைய தற்போதைய் முகவரியை வீட்டின் புதிய சொந்தக்காரரிடம் பெற்று அதன் பின் அவர் வீட்டைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற நிலையில் நான் கிடைக்கும் உதவியை ஏற்கத் தயங்கினேன். ஆனால் அவர் வற்புறுத்தித் தன் வண்டியில் ஏறும்படி வேண்டினார். வேறு வழியின்றி அவருடன் புறப்பட்டேன். திரு அருணாசலம் அவர்களின் வீடு புதிதாக விரிவாக்கப் பட்டு வரும் ஒரு காலனியில் இருந்ததால் முழுமையான முகவரியின்றி ஒரு சில அடையாளங்கள் மட்டும் தெரிந்து கொண்டு என்னுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் சுற்றி நான் சேர வேண்டிய இடத்தில் என்னைச் சேர்த்தார்.

அந்த நண்பரிடம், நான் என் ஆச்சரியத்தை அடக்க முடியாமல் ரயில் பயணத்தில் சந்தித்த ஒருவருக்கு ஏன் இந்த அளவுக்கு உதவுகிறீர்கள் என்று வினவினேன். அவரோ பதிலாக காரைக்குடியில் ஓர் ஆண்டுக்கு மேல் இருந்ததாகச் சொன்னீர்களே. இது போன்ற உதவி காரைக்குடியில் கிடைப்பது இது தான் முதல் தடவையா? என்ற கேள்வியை எழுப்பினார். இது எங்கள் இயல்பு என்று கூறி என்னிடம் விடை பெற்றுச் சென்றார். உண்மை தான். பெருமைப் பட வேண்டிய குணாதிசய்ம் கொண்ட காரைக்குடி நகரத்தார் ஒருவர் இருவர் அல்ல.

இவ்வளவு உதவியும் பெற்றுக்கொண்ட நானோ அந்த நண்பரின் பெயரைக் கேட்டேன், நட்பு பாராட்டினேன், நன்றி கூறினேன் என்பதைத் தவிர, அவர் முகவரியையோ பெயரையோ குறித்து வைத்துக் கொள்ளத் தவறியதால், இன்று அந்த உதவியின் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளன. அந்த நல்ல மனிதர் இதைப் படிப்பார் என்று எனக்கு ஒரு நம்பிக்கை என்னுள் இழையோடுகிறது.

அந்த நண்பர் மிகச் சரியாகக் கூறியது போல், தானாக முன் வந்து உதவுகின்ற சீறிய மனப்பான்மை கொண்ட காரைக்குடியின் நகரத்தார் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.